April 18, 2024
  • April 18, 2024
Breaking News
March 19, 2018

யாழ் திரைப்படம் – ஒரு விமர்சனப் பார்வை

By 0 3414 Views

‘யாழ்’ என்றதுமே இது இலங்கைத் தமிழரைப் பற்றிய பதிவு என்பது புலனாகிறது. அதுவும் ஒரு வகையில் உண்மைதான். ஈழப்போர் உச்சகட்டத்தை எட்டுவதற்கு முந்தைய காலக்கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இரண்டு மணி நேரத்தில் மூன்று இடங்களில் ஆறு பேர் சந்திருக்கும் வாழ்க்கைப் பிரச்சினைகள்தான் களம்.

ஆனால், அது மட்டுமே கதையல்ல. கதையின் அடிநாதம், உலகெங்கும் போர் பூமியில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் நிலக்கண்ணி வெடிகளைப் பற்றிய கவலை.

இந்தக் களத்தில் யாழ் நிலத்தில் பதித்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளைத் தொட்டுக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. அதுவே இதுவரை ஈழப்போர் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் கதைகளினின்று இதனை வித்தியாசப்படுத்துகிறது.

ஆயுதத்துக்குத் தெரியாது தன்னைப் புதைத்தவனையும், தன் எதிரியையும். எவரையும் அது கொல்லவே தலைப்படும் என்ற செய்தி ஈழத்துக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே பொதுவானது.

முதல் கதை இப்படி விரிகிறது. தமிழீழ போராளி இயக்கத்தைச் சேர்ந்த ‘தமிழ்ச்செல்வி’ என்ற ஒரு பெண்ணைத் தேடிக்கொண்டிருக்கும் சிங்கள சிப்பாய் டேனியல் பாலாஜியின் கண்களில் தமிழ்ப்பெண் ‘செல்வி’ என்ற நீலிமா சிக்க, அவளை விசாரித்துக் கொண்டிருக்கையில் தவறுதலாக ஒரு கண்ணி வெடியின் மீது காலை வைத்து விடுகிறார் அவர். அதனால், தானும் அகல முடியாமல், நீலிமாவையும் அகல விடாமல் நடத்தும் போராட்டம் ஒரு பக்கம்.

அடுத்த கதையில் தன் அம்மாவின் விருப்பப்படி தாய்நிலத்தில் உழுவதற்காக அதில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளையெல்லாம் தனி ஒரு மனிதனாகத் தோண்டி எடுக்கும் முயற்சியிலிருக்கும் சசிகுமார் சுப்ரமணி, கனடாவிலிருந்து தேடி வந்த தன் காதலி மிஷா கோஷலின் அழைப்பையும், காதலையும் நிராகரிக்கிறார்.

மூன்றாவது கதையில் அகதியாக ஈழத்தைவிட்டு வெளியேற நினைக்கும் காதலி லீமா பாபுவுடன் தானும் வெளியேற நினைக்கும் வினோத் கிஷன் செல்லும் வழியில் விமான குண்டுவீச்சால் தன் அம்மாவைத் தொலைத்துவிட்டு தனியாக நிற்கும் குழந்தை பேபி ரக்ஷனாவைத் தன்னுடன் கூட்டிக்கொண்டு அவள் அம்மாவையும் கண்டுபிடிக்கச் செல்கிறார்.

இம்மூன்று கதைகளையும் முதல்பாதியில் சொல்லி இரண்டாவது பாதியில் இதற்கு முன்பான பிளாஷ்பேக்குகளைச் சொல்லி, கடைசியாக மூன்று கதைகளின் கிளைமாக்ஸையும் அடுத்தடுத்துச் சொல்லி அற்புதமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இதன் தயாரிப்பாளரும், இயக்குநருமான எம்.எஸ்.ஆனந்த்.

மூன்று முடிவுகளையுமே நிலக்கண்ணி வெடிகளே தீர்மானிப்பது நெஞ்சை உலுக்குகிறது. ஆனால், கண்ணிவெடிகளுக்கு இல்லாத கருணையாய் அதில் கொஞ்சம் ஆறுதல் தெளித்து நம்மை ஆற்றுப்படுத்தி அனுப்புகிறார் ஆனந்த்.

ஒளிப்பதிவும், இசையும் அளவாகப் பொருந்தியிருக்கின்றன. அதில் யாழ்ப்பாணம் உருவான வரலாறு சொல்லும் டைட்டில் பாடலும், அதற்கான ஓவிய விளக்கங்களும் அருமை.

இதில் கொடுமை என்னவென்றால், பாலியல் காமெடிப் படங்களுக்கெல்லாம் தியேட்டரும், வினியோகஸ்தரும் கிடைத்துவிடும் கோலிவுட்டில் ஒரு உணர்வுள்ள… உலகுக்கே உன்னத செய்தி சொன்ன இந்தத் தமிழ்ப்படம் வெளியாக வாய்ப்பில்லாமல் நான்கு வருடங்களாக முடங்கிக் கிடந்ததுதான்.

அந்த நான்கு வருடங்களில் எப்போதும் ஆர்.கே.வி ஸ்டூடியோ வாசலில் எதிர்ப்படும் ஆனந்த்தைப் பார்க்க பாவமாக இருக்கும்.ஆனாலும் அவர் தன் படம் எப்படியும் வெளியாகிவிடும் என்ற உறுதியோடுதானிருந்தார்.

சொந்தப்படமாகக் கையிலிருக்கும் காசையெல்லாம் கொட்டி… அல்லது கடன்வாங்கி… இப்படி ஒரு உணர்வுள்ள படத்தைத் தரவேண்டுமென்று அவர் நினைத்தது குற்றமா என்ன..?

எப்படியோ ஒரு வெளியீட்டாளர் கிடைத்து சில மாதங்களுக்கு முன்னர் யாழ் வெளியானது. போதிய தியேட்டர்களும், விளம்பரங்களும் இன்றி கண்டும்காணாமலும் கைவிடப்பட்ட நிலையில், அதை மீண்டும் மறு வெளியீடு செய்திருக்கிறார் ஆனந்த்.

இப்போது புதிய படங்கள் வெளியாகாத நிலையில் ஒருவாரம் தாக்குப்பிடித்து நின்றிருக்கிறது யாழ் என்பதில் ஆனந்தைவிட ஆனந்தமடைந்திருப்பது நான்தான் – என் போன்ற சிலரும் இருக்கலாம்.

படைப்புரீதியாகக் கொண்டாடுவதற்கு உகந்த படமாக ‘யாழ்’ இல்லாதிருக்கலாம். அதற்கு பட்ஜெட் உள்பட பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், கருத்துரீதியாகக் கொண்டாடவேண்டிய படம் இது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மறுவெளியீட்டின்போது இரண்டாவது முறையாக பத்திரிகையாளர் காட்சி நடத்தினார் ஆனந்த். அப்போது, “இரண்டாம் உலகைப் போரை இன்னும் மறந்துவிடாமல் உலகப்புகழ்பெற்ற ‘குவென்ட்டின் டாரன்டினோ’, ‘கிறிஸ்டோபர் நோலன்’ போன்ற இயக்குநர்களெல்லாம் எடுத்துக் கொண்டிருக்க, அதற்கு உலக சினிமா ரசிகர்களும் அற்புதமாக வரவேற்புக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

அப்படி தமிழ் ரசிகர்களும் யாழ் படத்துக்குக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கையில்தான் இத்தனைக் காலம் காத்திருந்தேன்..!” என்றார்.

அந்த நம்பிக்கை சரிதானா என்பதை அவர் நம்பும் தமிழ் சினிமா ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும்..!

– வேணுஜி