March 29, 2024
  • March 29, 2024
Breaking News
June 17, 2018

மிக விரைவில் திமுக ஆட்சி உதயமாகும் – முக ஸ்டாலின்

By 0 1042 Views

நேற்று சென்னை அண்ணாநகர் எம்.ஜி.ஆர்.காலனியில் நடந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி யின் 95-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கல்ந்துகொண்ட தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதிலிருந்து…

“கருணாநிதி பிறந்தநாள் விழாவை தி.மு.க. சார்பில் தமிழ்நாட்டில் மட்டும் நாம் கொண்டாடவில்லை. தமிழகத்தைத தாண்டி இருக்கக்கூடிய பல்வேறு மாநிலங்களில்… கடல் கடந்து எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ, அங்கு எல்லாம் கொண்டாடப்படுகிறது.

அதற்குக் காரணம். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தமிழர்களுக்கு மட்டும் இல்லாமல், உலகம் எங்கும் பரவிக்கிடக்கிற தமிழர்களின் பாதுகாப்பு அரணாக விளங்கி கொண்டிருக்கும் ஒரே தலைவர் அவர் என்பதால்தான்.

உடல் நலிவுற்ற நிலையில் அவர் இப்போது ஓய்வு எடுக்கிறார். நாங்கள் அவரது காதுக்கு அருகில் சென்று பேசுவோம். அப்போது முக மலர்ச்சியை வெளிப்படுத்துவார். “அண்ணா அறிவாலயத்துக்குப் போகலாமா?” என்று கேட்டால் அற்புதமாக ஒரு சிரிப்பு சிரிப்பார்.

அவருக்குப் பேச்சு பயிற்சி தந்தபோது, மிகவும் சிரமப்பட்டாலும் ‘அண்ணா…’ என்று சொல்வார். ஒரு பேனாவைக் கையில் கொடுத்தால், அண்ணா என்று எழுதுவார். அண்ணாவையே நாள் முழுவதும் நினைத்துக்கொண்டு இருக்கும் தலைவர் கருணாநிதிதான்.

சில கட்சித் தலைவர்கள் இன்றைக்கு, கருணாநிதி இருந்தால் “இப்படி விட்டிருப்பாரா?” என்கிறார்கள். அவர் எப்போது எதை செய்வார் என்று யாருக்கும் தெரியாது. அதை கொஞ்சம் நாங்களும் கற்று உள்ளோம். உரிய தந்திரத்தை எங்களுக்குக் கருணாநிதி கற்றுத்தந்து இருக்கிறார். உரிய நேரத்தில் அதைப் பயன்படுத்துவோம்.

தி.மு.க. ஆட்சியில் செய்த நலத்திட்டங்கள் போல இனி செய்யப்படுமா? எவன் பிறந்து வந்தாலும் கருணாநிதி திட்டங்களை செயல்படுத்த முடியாது. ஆனாலும் எதிர்க்கட்சியாக ஒவ்வொரு மக்கள் பிரச்சினைக்கும் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்தோம். தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் ஒரு அனுதாபமாவது மோடி தெரிவித்தாரா..? குஜராத்தில் நடந்தால் சும்மா விட்டிருப்பாரா..? வடமாநிலங்களில் இந்த விபரீதம் நடந்திருந்தால் பேசாமல் இருந்திருப்பாரா? அவருக்கு என் பகிரங்க கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.

இனி தூத்துக்குடி என்று சொல்லக்கூடாது, சாத்துக்குடி என்று தான் சொல்லவேண்டும். தூத்துக்குடி எம்.எல்.ஏ. என்று கூட சொல்லக்கூடாது. ஏனென்றால் அங்கு நடந்த படுகொலையை பற்றி பேசக் கூட எங்களுக்கு சட்டசபையில் அனுமதிக்க மறுக்கிறார்கள்.

சமீபத்தில் பூவா? தலையா? என்று தமிழகமே நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருந்தது. ஆனால் இரண்டுமே இல்லாமல் தீர்ப்பு நட்டுக்குத்தாக நிற்கிறது. தற்போது வந்துள்ள தீர்ப்பால் ஆட்சிக்கு ஆபத்து இல்லை. ஆனால் மக்களுக்கு ஆபத்து.

இன்றைக்கு கருணாநிதியின் 95-வது பிறந்தநாளை கொண்டாடுகிறோம். 100-வது பிறந்தநாளையும் கொண்டாடுவோம் என்ற உறுதியுடன் சொல்கிறேன். அதே நேரத்தில் தமிழ்நாட்டில் மிக விரைவிலேயே தி.மு.க.வின் ஆட்சி உதயம் ஆக போகிறது. தயாராக இருங்கள்..!”